மத்திய கிழக்கு போர் ஒரு சாக்குப்போக்கு! – எரிபொருள் விலை உயர்வைச் சாடும் திஸ்ஸ அத்தநாயக்க.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்புச் செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு வரை கூறிய அரசு, தற்போது திடீரென விலையை உயர்த்தியுள்ளது நகைப்புக்குரியது. எரிவாயு விலையை 300 ரூபாவால் அதிகரித்துள்ளமையானது உணவகங்கள் முதல் சாதாரண வீட்டுத் தேவைகள் வரை அனைத்தையும் பாதிக்கும். இது ஒட்டுமொத்த உற்பத்தித் துறையையும் மக்களின் வாழ்க்கைச் செலவையும் பாரியளவில் உயர்த்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவோம் என்றும், அமைச்சர்களின் இலாபத்தைத் தடுப்போம் என்றும் கூறியவர்கள், இன்று அதிகப்படியான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறிவிட்டனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 – 85 டொலராக இருக்கும் போது, 100 டொலருக்கும் அதிகமான விலையில் கணக்கிட்டு அரசு மக்களை ஏமாற்றுகின்றது.

மின்சார சபையை ஆறு பகுதிகளாகப் பிரிக்கும் முயற்சி அதனைத் தனியார்மயமாக்கும் முதற்கட்டமேயாகும். தேர்தலுக்கு முன்பு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று அதையே செய்கின்றனர். நிலக்கரி கொள்முதல் ஊழல்களின் நட்டத்தையும் மக்கள் மீதே அரசு சுமத்துகின்றது.

நிர்வாகத் திறமையற்ற இந்த அரசின் மீது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகின்றது. அரசு உண்மையிலேயே மக்கள் ஆதரவுடன் இருப்பதாக நினைத்தால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பார்க்க வேண்டும். மக்கள் விரைவில் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.