மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் உறுதி – ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் முக்கிய இணக்கப்பாடு.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனக் கட்டமைப்புக்குள் உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ஊழியர் உரிமைகளும்
கூட்டு ஒப்பந்தமும்
மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளான புதிய நிறுவனங்களில் முறையான நியமனக் கடிதங்களைப் பெறுதல் மற்றும் கூட்டு ஒப்பந்தம் ஆகியன குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை விரைவாக அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவது குறித்து இணக்கம் காணப்பட்டது.
வலுசக்தித் துறையின்
முக்கியத்துவம்
அரசின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் வலுசக்தித் துறையை மையமாகக் கொண்டே அமையும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். “நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக வலுசக்தித் துறை மாறி வருகிறது. இந்தச் சவாலை வெற்றிகொள்ள வலுவான நிறுவனக் கட்டமைப்பும், உயர் மட்ட நிதி ஒழுக்கமும் அவசியமானது” என்று அவர் மேலும் விளக்கினார்.
தொழிற்சங்கங்களின் ஆதரவு
மத்திய கிழக்கின் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்த நேரத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது அரசுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். மேலும், மறுசீரமைப்புச் செயற்பாட்டைச் சரியான முறையில் நிறைவு செய்வதற்குத் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
அர்ப்பணிப்புக்குப் பாராட்டு
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி போன்ற அவசர காலங்களின் போது, மின்சார சபை ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பான சேவையை ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
