123 கிலோ ஹெரோயினுடன் நடுக்கடலில் சிக்கிய படகு! – 5 கடத்தல்காரர்களிடம் தீவிர விசாரணை.

இலங்கைக் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட இந்த பலநாள் மீன்பிடிப் படகு, கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சுமார் 123 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், படகிலிருந்த 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்களுடன் கூடிய படகு, இன்று திங்கட்கிழமை அதிகாலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

மீட்கப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில், கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.