17 பக்க உருக்கமான கடிதம்: சக மாணவர்களின் மிரட்டலால் எம்பிபிஎஸ் மாணவர் எடுத்த விபரீத முடிவு

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், கடந்த 14-ந்தேதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் நத்திய விசாரணையின்போது, தற்கொலை செய்து கொல்வதற்கு முன்பு மாணவர் எழுதிவைத்த 17 பக்க கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு தன்னுடன் படிக்கும் 5 மாணவர்களே காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக தற்கொலை செய்து கொண்ட மாணவர், கல்லூரியில் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த காதலை கைவிடுமாறு அவருடன் படிக்கும் சக மாணவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவரை தாக்கி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக உயிரிழந்த மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்ட 5 மாணவர்கள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தற்போது எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 5 மாணவர்கள் தரப்பில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், போலீஸ் பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வு எழுத அழைத்துச் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.