ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? – மார்ச் 31 இல் இரகசியத்தை உடைக்கின்றார் கம்மன்பில.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான ‘பிரதான சூத்திரதாரி’ யார் என்பது குறித்த இரகசியத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாகப் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேடல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி நூல் ஒன்றைத் தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நூல் வெளியீட்டு விழா மார்ச் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மறைக்கப்பட்ட உண்மைகள்: அரசாங்கத்தினால் இதுவரை வெளிப்படுத்தப்படாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இந்த வெளியீட்டின் போது பகிரங்கப்படுத்தவுள்ளோம்.

கடந்த ஏழு வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்பட்டது. ஆட்சிகளை உருவாக்கவும், கவிழ்க்கவும் இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.

எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, இராணுவத்தினரை வேதனைப்படுத்துவதற்கும், அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கும் இந்தச் சம்பவம் பயன்படுத்தப்பட்டது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மார்ச் 31 ஆம் திகதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” – என்று உதய கம்மன்பில மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.