தன் கட்சிக்குள் நடப்பதே புரியாத துரதிர்ஷ்டவசமான எதிர்க்கட்சித் தலைவர்! – அமைச்சர் சமந்த சாடல்.

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“உலக விவகாரங்களைப் பேசும் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தனது கட்சிக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் குழுக்கள் உருவாவது குறித்துப் புரியவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவருக்குச் செய்யப்போகும் காரியம் குறித்தோ, தற்போது பின்னப்படும் வலைகள் குறித்தோ அவருக்கு எவ்விதத் தெளிவும் இல்லை. உண்மையைச் சொல்லும்போது வலிக்கலாம், ஆனால் அதுதான் நிஜம். உலகத்தைப் புரிந்துகொண்டு, தனக்கு நடப்பதைப் புரிந்துகொள்ளாத ஒரு துரதிர்ஷ்டவசமான எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு இருப்பது கவலைக்குரியது.

கடந்த சில நாட்களாக அவருடைய உரைகளை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் ஒரே விடயத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றார். திறைசேரி நிரம்பி வழிகிறது எனக்கூறி, இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள் என்று தேவையற்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்.

அடுத்ததாக, இவர்கள் ஒரு விசித்திரமான கதையைச் சொல்கின்றார்கள். மத்திய கிழக்கில் போர் வரும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே உலகிற்குத் தெரியும் என்றும், ஜூன் மாதத்திலிருந்தே தங்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் தற்போதைய அரசாங்கம் அதற்குத் தயாராகவில்லை என்றும் கூறுகின்றார்கள். இவ்வளவு ‘நிபுணத்துவ அறிவு’ இவர்களுக்கு இருந்திருந்தால், அதனை அமெரிக்காவிற்கோ அல்லது ஈரானுக்கோ வழங்கிப் போருக்குத் தயாராகுமாறு எச்சரித்திருக்கலாமே?

இவ்வளவு ‘அறிவுள்ள’ தலைவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன்; தேர்தல் காலத்தில் உங்கள் கட்சிக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் கட்சிக்குள்ளேயே இருந்த அந்தப் பாரிய நெருக்கடி கூடவா உங்களுக்குப் புரியவில்லை?” – என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.