விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள சட்டம் – சஞ்சீவ எதிரிமான்ன கடும் சாடல்.
இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“சட்டம் என்பது ஆசைகளினால் பாதிக்கப்படாத தூய பகுத்தறிவு என வரையறுக்கப்பட்டாலும், இலங்கையில் விசாரணை அதிகாரிகள் தங்களது அரசியல் அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதன்போது கபில சந்திரசேன என்பவரால் வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய சத்தியக்கடதாசி ஒன்றை நாம் ஆதாரமாக முன்வைக்கின்றோம்.
அந்தச் சத்தியக்கடதாசியில், விசாரணை அதிகாரி ஒருவர் தன்னை அச்சுறுத்தும் தொனியில் பேசியதாகக் கபில சந்திரசேன குறிப்பிட்டுள்ளார். ‘இது உனது கடைசி வாய்ப்பு; இதற்கு முன்னர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தாததால் அவர் தற்கொலை செய்துகொண்டார். நீயும் அவ்வாறு ஆக விரும்பவில்லை என்றால், மஹிந்த மற்றும் நாமலின் பெயர்களைக் கூறு’ என அந்த அதிகாரி மிரட்டியதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்படும் இத்தகைய வாக்குமூலங்களுக்கு முறையான சட்ட வலிமை இல்லை என்றாலும், ஒருவரது தனிப்பட்ட விருப்பங்களைச் சட்டத்துடன் கலக்கும் இத்தகைய செயற்பாடுகள் பாரதூரமானவை. அத்துடன், இந்தச் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இதற்கு முன்னர் விசாரணையின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து வாக்குமூலம் அளிப்பதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்ற இரு தெரிவுகளையே விசாரணை அதிகாரிகள் சாட்சிகளுக்கு வழங்குகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதனை ஒரு அரசியல் கட்சியின் நோக்கமாக மட்டும் பார்க்காமல், சமூக நீதிக்கான ஒரு போராட்டமாக அனைவரும் கருத வேண்டும்.
இன்று மற்றவர்களுக்கு நடக்கும் இந்த அநீதி நாளை சாதாரண மக்களுக்கும் ஏற்படலாம் என்பதால், சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலைநாட்ட இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது அவசியம்.” – என்றார்.
