சொகுசு பஸ்ஸில் பயணித்த கல்முனை நபர் திடீர் சாவு!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸில் பயணித்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸில் மேற்படி நபர் பயணித்துள்ளார். பஸ் வவுனியாவை வந்தடைந்த நிலையில், நீண்ட நேரமாக அவர் எவ்வித அசைவுமின்றி இருப்பதைக் கவனித்த பஸ் நடத்துநரும் சாரதியும் சந்தேகமடைந்துள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட அவர்கள், அந்த நபரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அலாவுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புத்தளம் பகுதியிலிருந்தே குறித்த பஸ்ஸில் ஏறினார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.