மயக்க மருந்துகளைக் கொடுத்து தங்க நகைளைக் கொள்ளையிட்ட பின் பெண்களை கிணற்றில் வீசி வந்த கொடூரக் கும்பல் சிக்கியது! – மட்டக்களப்பில் தம்பதி உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் பெண்களை வீசி, அவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவி மற்றும் மைத்துனர் அடங்கிய மூவர் கொண்ட கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு தனது இரண்டரை வயதுக் குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை, குறித்த தாய் நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது குழந்தை அருகில் உள்ள வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சி.சி.ரி.வி. காட்சிகளைப் பரிசோதித்தனர். இதில் குறித்த தாயை ஏற்றிச் சென்ற ஓட்டோ மற்றும் அவருடன் இருந்த பெண் குறித்த முக்கிய தடயங்கள் கிடைத்தன.

இதனையடுத்து, வந்தாறுமூலை பகுதியில் மறைந்திருந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியா என்ற பெண்ணை பொலிஸார் முதலில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது கணவரான வெற்றிவேல் சதீஸ்வரன் (வயது 34) மற்றும் அவரது தம்பியான வெற்றிவேல் தனோஜன் (வயது 22) ஆகிய இருவரும் வவுணதீவு பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசை வார்த்தை

வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பஸ்ஸுக்காகக் காத்திருந்த இளம் தாயை, குறைந்த வாடகையில் அழைத்துச் செல்வதாகக் கூறி ஓட்டோவில் ஏற்றியுள்ளனர்.

மயக்க மருந்து

மட்டக்களப்பு நகரில் அடகு வைத்த நகையை மீட்டுக்கொண்டு மீண்டும் திரும்பிய அந்தத் தாய்க்கு, வழியில் மயக்க மருந்து கலந்த பழச்சாறு கொடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளை மற்றும்
கொலை முயற்சி

அந்தத் தாய் மயக்கமடைந்ததும், அவரது கழுத்திலிருந்த 5 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளனர். பின்னர் குழந்தையை வயல் பகுதியில் வீசிவிட்டு, மயக்கமடைந்த தாயை பாழடைந்த கிணற்றுக்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர் குற்றச்சாட்டு

அதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும், இதே பாணியில் மயக்க மருந்து கொடுத்து நகைகளைத் திருடிக்கொண்டு கிணற்றில் வீசியதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.