ராஜபக்ஷக்களின் ஆட்சியை விட தற்போதைய நிர்வாகம் மோசம்! – முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாடல்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள அண்மைக்கால எரிபொருள் விலை அதிகரிப்பானது நவீன வரலாற்றில் ஓர் அரசாங்கம் மேற்கொண்ட மிக மோசமான தந்திரோபாயம் எனவும், இது ஒரு ‘கறுப்புச்சந்தை முதலாளித்துவ’ பாணியிலான நடவடிக்கை எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களை மகிழ்ச்சியாக வாழ வைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், கடந்த மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கங்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்தனர். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஏற்படும் அனைத்து நிதி அழுத்தங்களும் நேரடியாக மக்கள் மீதே சுமத்தப்படுகின்றன.

முந்தைய ஆட்சிக் காலங்களில் போர்ச் சூழல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளின் போது கூட இவ்வாறான பாரிய அழுத்தங்கள் மக்கள் மீது திணிக்கப்படவில்லை. இன்று அரசாங்கம் எவ்வித சுமைகளையும் தாங்காமல் சுதந்திரமாக இருக்கிறது; ஆனால் சாதாரண மக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

உலக சந்தையில் விலை உயரும் போது உள்நாட்டிலும் விலையை உயர்த்துவதற்கு ஒரு அமைச்சர் அல்லது ஜனாதிபதி தேவையில்லை என அன்று நாடாளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க கூறினார். ஆனால் இன்று அவரே ஒரு கறுப்புச்சந்தை முதலாளியைப் போலச் செயற்படுகின்றார்.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தாங்க முடியாத சுமைக்கு ஆளாகியுள்ளனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.