மத்திய கிழக்கு போர் நெருக்கடி: எரிசக்தி பாதுகாப்பு குறித்து மோடி – அநுர ஆலோசனை! – தொலைபேசியில் நேற்று உரையாடல்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோரிடையே நேற்று மாலை விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்காசியாவின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினேன். குறிப்பாக, உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும் உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளோம்.” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தடைப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீட்டு மேலாண்மை மற்றும் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கைக்கான முக்கிய பங்காளியாக இந்தியா தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
