ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்!

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் (வயது 77) இன்று காலை காலமானார்.

சுமார் அறுபது ஆண்டுகாலமாக ஊடகத்துறையில் நடுநிலை தவறாது பணியாற்றிய இவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

‘வீரகேசரி’ பத்திரிகையில் தனது ஊடகப் பணியைத் தொடங்கிய இவர், அதனைத் தொடர்ந்து தினபதி, சிந்தாமணி, உதயன், தமிழன் மற்றும் முரசு உள்ளிட்ட முன்னணிப் பத்திரிகைகளிலும், பல இலத்திரனியல் ஊடகங்களிலும் பிராந்திய செய்தியாளராகக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தனது இறுதி மூச்சு வரை சகல இன மக்களினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒரு நேர்மையான ஊடகவியலாளராக அவர் திகழ்ந்தார்.

அன்னார் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த காலப்பகுதியில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சங்கத்தின் ஊடாக உருவானது என்பது குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தியாகும்.

மேலும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘மானிடத்தின் தமிழ்க்கூடல்’ நிகழ்வின் இறுதி நாளன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிவித்தலுக்கமைய நடப்பட்ட ஐந்து மரக்கன்றுகளில் ஒன்றை நடும் கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இது அவரது ஊடகப் பணிக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம், நிந்தவூரைச் சேர்ந்த சலீம், ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீமின் அன்புக் கணவரும், எஸ்.எப். அகீலா மற்றும் எஸ்.எம். அகீல் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் மறைவுச் செய்தி தமிழ் – முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியிலும், தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.