சடலங்களை எரிப்பதை மீள் பரிசீலனை செய்யவும் : ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் நடைமுறையை இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யுமென எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்பார்ப்பதாக, ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

COVID-19 தொடர்பான இந்த சவாலான காலத்தில் இலங்கை மக்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் விசேட முகவர் நிலையங்கள், நிதி மற்றும் திட்டங்கள் என்பன, இத்தொற்றுநோயை நிர்வகிப்பதில் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

உலகெங்கிலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை பாதுகாப்பான மற்றும் கண்ணியமாக கையாளுதல் என்பது, COVID-19 தொடர்பிலான ஒரு முக்கிய செயற்பாடாகும்.

இலங்கையில் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கான தற்போதைய தடை விரைவில் மறுபரிசீலனை செய்யப்படலாம் எனும் அண்மைய ஊடக அறிக்கைகளை நான் ஆர்வத்துடன் அவதானிக்கிறேன். இந்நிலையில், COVID-19 நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மரணித்தவர்களின் உடல்களை அகற்றும் ஒரே முறையாக தகனம் செய்யும் முறை தொடர்பில், தற்போது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் எண்ணத்தை மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பை நான் பெற விரும்புகிறேன்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் , “Infection prevention and control for the safe management of a dead body in the context of COVID-19” (COVID-19 இன் தொடர்பில், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், இறந்த உடலொன்றை பாதுகாப்பாக நிர்வகித்தல்) எனும் வழிகாட்டல் மூலம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை கையாளுதல் தொடர்பில், கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி அதனைத் தொடர்ந்து செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி ஆகிய தினங்களில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போது கொவிட்-19 அறிகுறிகள் மற்றும் அதன் பரவுகை தொடர்பில் அறிந்துள்ள விடயங்களுக்கு அமைய, சடலங்களின் ஊடாக நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவித்திருந்தது.

நோய்த் தொற்றுக்களினால் உயிரிழப்போரின் சடலங்கள் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தகனம் செய்வது வழமையான நம்பிக்கையாகும் எனினும் இதற்கு ஆதாரங்கள் கிடையாது. சடலங்களை எரிப்பது கலாச்சார மற்றும் காணப்படும் வளங்களின் அடிப்படையிலானது ஆகும். கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியைகள் அந்தந்த பிரதேசங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பேணியவாறு மேற்கொள்ள முடியும் என்பது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலாக காணப்படுகின்றது.

இதேவேளை, சடலங்களை எரிப்பது தொடர்பில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில், முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமன்றி ஏனைய சமூகத்தவர்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இப்பின்புலத்தில், உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமையானது, சமூக ஒருமைப்பாட்டில் எதிர்வினையான விளைவை ஏற்படுத்தும் என்பதோடு, வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பில், அறிகுறிகள் அல்லது தொடர்புகள் உள்ளிட்ட சுகாதார விடயங்கள் பற்றிய, பொதுமக்களின் ஒத்துழைப்பை பெறுவதில் சிக்கலையும், அவர்களது நாட்டம் இதனால் குறையக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.

தொற்றுநோய்களின் போது, பொது சுகாதார காரணங்களுக்காக, அரசாங்கங்கள் பெரும்பாலும் கடினமான மற்றும் சில நேரங்களில் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதை நான் உணர்கிறேன். இருப்பினும், இந்த விஷயத்தில், அடக்கம் செய்ய அனுமதிக்காததன் எதிர்மறையான விளைவுகளானது, தொற்றுநோயை தடுப்பதை விட அதிகமாக இருப்பதாக தெரிகிறது. உலக சுகாதார அமைப்பின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டலையும், அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் மதித்து நிலைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடமைகளையும் கருத்தில் கொண்டு, COVID-19 இனால் மரணமடைந்தவர்களை பாதுகாப்பான வகையில், கண்ணியமாக அடக்கம் செய்யும் வகையில், தற்போதுள்ள கொள்கை திருத்தப்படும் என, எனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறேன்.

இந்த விடயம் தொடர்பில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் அதன் கருத்தை மாற்றம் செய்வது தொடர்பில், உச்சபட்ச அவதானத்தை செலுத்த, ஐக்கிய நாடுகள் சபை உரிய ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது.

உங்கள் உண்மையுள்ள
ஹனா சிங்கர்
ஐ.நா. வதிவிட இணைப்பாளர்

பிரதிகள்
கௌரவ தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர்
கௌரவ பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்
கௌரவ அலி சப்ரி, நீதியமைச்சர்

 

Leave A Reply

Your email address will not be published.