கோர விபத்தில் தம்பதியினர் பலி – 7 பேர் படுகாயம்.
மஹியங்கனை – கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
கிராந்துருகோட்டே நோக்கிப் பயணித்த ‘கப்’ ரக வாகனமொன்று, முன்னால் சென்ற மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி, கப் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த 7 பேர் என மொத்தம் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 57 மற்றும் 44 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய 7 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கப் ரக வாகனத்தின் சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
