மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை! – தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு.

மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சபையின் தலைவர் சந்தன பண்டார,

“வழக்கமாக வருடத்தில் இருமுறை மட்டுமே கட்டணத் திருத்தங்கள் குறித்து ஆராயப்படும். தற்போதைய சூழலில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. எவ்வாறாயினும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு அம்பத்தலேயில் மேலதிகமாக 50 ஆயிரம் கன மீற்றர் உற்பத்தி நிலையமும், களு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் கன மீற்றர் நிலையமும் அமைக்கப்படவுள்ளன. இவை முழுமையாக நிறைவடைய சுமார் 3 ஆண்டுகள் வரை எடுக்கும்.” – என்றார்.

தொடரும் வறட்சி நிலை குறித்து எச்சரித்த அவர், “வறட்சி மேலும் நீடித்தால் நீர் விநியோகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் தற்போதிலிருந்தே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” – என்று வலியுறுத்தினார்.

தோட்டங்களுக்கு நீர்ப் பாய்ச்சுதல் மற்றும் வாகனங்களைக் கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு அதிகளவு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொறுப்புடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.