பொலிஸ் காவலின் கீழ் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக் குற்றவாளி செவ்வந்திக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் – சி.ஐ.டி. அதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை.
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குப் பொலிஸ் காவலின் கீழ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். இதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
“பொலிஸ் அதிகாரிகள் அரசின் ஊழியர்கள். அவர்கள் எக்காலத்திலும் குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேண முடியாது. தமது விழுமியங்களையும் பொறுப்புக்களையும் உணர்ந்து அவர்கள் கடமையாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்தச் செயலானது பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை விளைவித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பொலிஸ் தலைமையகம், தவறிழைக்கும் அதிகாரிகள் எவராக இருந்தாலும் தரம் மற்றும் பதவி பாராமல் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
