அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 16, 17 இல் இணையவழி வேலை! – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்தாய்வு.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியைச் சேமிக்கும் நோக்கில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அரச சேவைகளை இணையவழி ஊடாக முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது.

அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழியில் நேற்று நடைபெற்ற போதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இக்கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

எரிபொருள் சிக்கனம்

அரச நிறுவனங்களில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தனது டீசல் நுகர்வை 42 சதவீதத்தினால் குறைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கல்வித் துறை நடவடிக்கைகள்

வலுசக்தி முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படவுள்ளன.

பல்கலைக்கழகங்கள் இயலுமான சந்தர்ப்பங்களில் இணையவழி ஊடாகத் தமது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்கின்றன.

அத்தியாவசிய சேவைகள்
மற்றும் பரீட்சைகள்

கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சை உள்ளிட்ட திட்டமிடப்பட்ட பரீட்சைகள் முறையாக நடத்தப்பட்டுள்ளதாகப் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது. போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட துறைகள் அத்தியாவசிய ஊழியர்களைக் கொண்டும், இணையவழி முறைமைகளைப் பயன்படுத்தியும் சேவைகளைத் தடையின்றி வழங்கி வருகின்றன.

நீர் முகாமைத்துவம்
மற்றும் விழிப்புணர்வு

நீர் விரயமாவதைத் தவிர்ப்பதற்கும், மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசேட பிரச்சாரமொன்றைத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

புதிய வழிகாட்டல்கள்

இணையவழி ஊடாகக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான வழிகாட்டல்களை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றுநிருபம் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது.

டிஜிட்டல் கண்காணிப்பு

நாளாந்த வலுசக்தி நுகர்வு, எரிபொருள் கையிருப்பு மற்றும் அரச ஊழியர்களின் வருகை போன்றவற்றைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்கு டிஜிட்டல் முறையிலான Dashboard ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இக்குழுவின் அடுத்தக்கட்டச் சந்திப்பு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.