நிலக்கரி ஊழலின் சுமையை மக்கள் சுமக்க வேண்டுமா? – மின் கட்டண உயர்வு குறித்து சம்பிக்க ரணவக்க கடும் சாடல்.
“அரசின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமையாது” – என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அநுரகுமார திஸாநாயக்கவின் அரசு இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அரசு 13.5 சதவீத அதிகரிப்பைக் கோரியிருந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை 10.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும், வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் 13.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பானது கைத்தொழில் துறைக்கு 8.7 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த அதிகரிப்பு காரணமாக நாட்டின் தொழிற்துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். அத்துடன், மின்சார சபையைக் கலைப்பதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமாரவே ஏற்றுள்ளார். சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் சபையிலிருந்து விலக இணங்கியுள்ள நிலையில், அவர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பான விடயங்களும் தற்போதைய கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளன.
அரசு முன்னெடுத்துள்ள நிலக்கரி ஊழல்களின் விளைவையே இன்று மக்கள் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அனுபவிக்கின்றனர். இவ்வாறான பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், இம்முறை மலரும் புத்தாண்டு மக்களுக்குச் சுபீட்சமான ஒன்றாக அமையப் போவதில்லை.” – என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
