ஓட்டோ – லொறி மோதிய விபத்தில் முதியவர் பலி! – இரு பெண்கள் படுகாயம்.
குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதானகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஓட்டோவில் பயணித்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் மேலும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாவத்தகம, உதானகம பகுதியில் இருந்து மீகொல்ல நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று, எதிரே வந்த லொறியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் கோரத்தால் ஓட்டோ பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தின் போது ஓட்டோவின் பின் இருக்கையில் பயணித்த ஓர் ஆணும், இரு பெண்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஆண் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த மற்றைய இரு பெண்களுக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து தொடர்பாக லொறி மற்றும் ஓட்டோவின் சாரதிகள் இருவரும் மாவத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற விதம் குறித்து மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
