காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!
மகாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகமுயாய, பொல்கஸ்தலாவ காப்புக்காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மகாஓயா பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் உணுவதுர புபுல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் காப்புக்காட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த தனது கால்நடைகளைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
