வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு – பாதுகாப்பு நிலவரங்கள், சிவில் ஒருங்கிணைப்பு குறித்து கலந்துரையாடல்.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்று காலை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், ஆளுநருடன் அவர் மேற்கொண்ட முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பு இதுவாகும்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இருவருக்குமிடையே சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் நவரத்னவுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சந்திப்பின் நினைவாக ஆளுநருக்குப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சிவில் நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்று அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.