110 கோடி ரூபா போதைப்பொருளுடன் 22 இளம் பிக்குகள் வசமாகச் சிக்கினர்! – தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்று திரும்பிய வேளை கட்டுநாயக்கவில் மடக்கிப் பிடிப்பு.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றிலேயே அதிகளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில், 22 பௌத்த பிக்குகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 110 கோடி ரூபா (1.1 பில்லியன்) பெறுமதியான போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை இரவு, கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசேட சோதனைகளை முன்னெடுத்தனர். இதன்போது, தாய்லாந்தில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் நாட்டுக்குள் மீளத் திரும்ப முயன்ற 22 இளம் பிக்குகளைச் சோதனையிட்டபோது இந்தப் பாரிய போதைப்பொருள் கடத்தல் அம்பலமானது.
கைது செய்யப்பட்ட பிக்குகள் வைத்திருந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு அடியில் இரகசிய அறை அமைக்கப்பட்டு, சுமார் 110 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹசீஸ்’ ஆகிய போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிக்குவும் தலா 5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளைக் கொண்டு வந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குழுவினர் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குப் பயணம் செய்துள்ளனர். இதற்கான விமானச் சீட்டுகள் மற்றும் செலவுகளைத் தரகர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் வெளிநாட்டில் சாதாரண உடையில் (சிவில் உடையில்) இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கண்டறியப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர்கல்வி பயிலும் நோக்கில் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தங்கியிருந்த இளம் பிக்குகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில், இவ்வளவு பெரிய போதைப்பொருள் தொகையுடன் பிக்குகள் குழுவாகக் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனப் பாதுகாப்புத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
