வெளிநாடு செல்லவிருந்த நபர் தெதுறு ஓயாவில் மூழ்கிப் பலி! – மஹவ பகுதியில் சோகம்.
வெளிநாடு செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், இடையில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குருநாகல், மஹவ – பலகொல்லாகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் வெளிநாடு செல்வதற்காகத் தனது பயணத்தைத் தொடங்கி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பயணத்தின் இடையே பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடுவதற்காக அவர் இறங்கியுள்ளார். இதன்போது, ஆற்றின் நீர்ச்சுழலில் சிக்கி எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கியவரை நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மீட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் நோக்கிச் சென்ற பயணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
