வாகன இலக்கத் தகடு மோசடி: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பெண் பிரதி ஆணையாளர் கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பெண் பிரதி ஆணையாளர், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான ஆரம்பப் பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் இலக்கத் தகடுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேகநபர் தற்போது பத்தரமுல்லையிலுள்ள சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் ஆணையாளராகப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள அவர், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
