சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் பெலாரஸுக்கு உயர்மட்ட விஜயம் – அமைச்சர் விஜித ஹேரத் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து.
இலங்கை மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், இலங்கையிலிருந்து பெலாரஸ் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது உயர்மட்ட இராஜதந்திர விஜயம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, பெலாரஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாக்சிம் ரிஷென்கோவ் மற்றும் அந்நாட்டுச் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.
இந்தத் தூதுக்குழுவில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேச்சுகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, கல்வி, சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த உடன்படிக்கைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
