முடிந்தால் பவித்ராதேவிக்கு எதிராக பிரேரணையைக் கொண்டு வாருங்கள்!  எதிரணிக்கு ஆளுங்கட்சி சவால்.

முடிந்தால் பவித்ராதேவிக்கு எதிராக பிரேரணையைக் கொண்டு வாருங்கள்!  எதிரணிக்கு ஆளுங்கட்சி சவால்

“முடிந்தால் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்.”

– இவ்வாறு ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை ஜனாதிபதி, பிரதமர் , சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து உரிய வகையில் கட்டுப்படுத்தினர். சுகாதார அமைச்சரும் தீவிரமாகச் செயற்பட்டார். தற்போதுகூட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள்தான் வைத்துள்ளோம்.

கொரோனாவை வைத்து சுகாதார அமைச்சரோ, அரசோ அரசியல் செய்யவில்லை. மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகின்றது.

நாம் ஆன்மீகத்தையும் நம்புகின்றோம். அந்தவகையிலேயே சுகாதார கங்கையில் சுகாதார அமைச்சர் மண்குடத்தைப் போட்டார். அது மதம் மீதுள்ள நம்பிக்கையாகும். ஆனால், அதனைக்கூட எதிரணியினர் கொச்சைப்படுத்துகின்றனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் எனக் கூறுகின்றனர்.

முடிந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருமாறு நான் சவால் விடுக்கின்றேன். அவ்வாறு பிரேரணை வந்தால் அதனை எதிர்கொண்டு தோற்கடிப்பதற்கு அரசு தயார். மக்களும் உரிய பதிலடியைக் கொடுப்பார்கள். இந்த அரசு ‘பெயில்’ இல்லை. எதிரணிதான் பலவீனமடைந்துள்ளது” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.