தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் – கல்முனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் முழக்கம்.

“இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது ஆணித்தரமான நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை நினைவஞ்சலி மற்றும் கஞ்சி விநியோக நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் முன்னிலையில் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது:-

“முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 17 ஆண்டுகள் கடந்தாலும், அந்த வடுக்கள் எமது மனதிலிருந்து என்றும் மாறப்போவதில்லை. இது திட்டமிட்ட முறையில் சர்வதேசத்தின் துணையோடு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை.

எத்தனையோ போராட்ட வீரர்களும், மக்களும் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை. அவர்களது எண்ணங்களைச் சுமந்தே எமது பயணம் தொடரும்.

2009 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் எமது அரசியல் போராட்டம் ஓயவில்லை. தமிழர்களுக்கான விடிவு கிடைக்கும் வரை சர்வதேச சமூகத்திற்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்குவோம்.” – என்றார்.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் அருந்தினர்.

Leave A Reply

Your email address will not be published.