மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டே நடத்தலாம் – யாழில் ரில்வின் சில்வா அறிவிப்பு.

இலங்கையில் நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டே நடத்தக் கூடிய சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட உத்தியோகபூர்வ அலுவலகத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்ததை நினைவூட்டிய ரில்வின் சில்வா, எதிர்பாராத அனர்த்தமே அதனைத் தாமதப்படுத்தியது என்றும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளிப் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளும், மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களின் அவசர நிவாரணப் பணிகள் மற்றும் வீட்டு மறுசீரமைப்புகளுக்காகத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து 500 பில்லியன் ரூபாவை உடனடியாக ஒதுக்க வேண்டிய தார்மீகச் சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டது.

இந்த நிதித் திசைதிருப்பல் காரணமாகவே, திட்டமிட்டபடி இந்த ஆண்டில் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட எல்லை நிர்ணயம் உள்ளிட்ட சில சட்ட நடைமுறைகளில் கடுமையான சிக்கல்கள் தோற்றுவிக்கப்பட்டன.

தற்போது இந்தச் சட்டச் சிக்கல்களைத் தீர்த்து, தேர்தலை நடத்துவதற்கான உகந்த வழியைக் கண்டறிவதற்காக விசேட நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை விரைவில் கிடைக்கப் பெறவுள்ளதுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் பரிசீலித்து உரிய திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் அடுத்த ஆண்டளவில் மாகாண சபைத் தேர்தலைத் திட்டவட்டமாக நடத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு அண்டை நாடான இந்தியா தரப்பிலிருந்து ஏதேனும் இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்திய அரசிடமிருந்து எமது அரசுக்கு எந்தவிதமான அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை. தற்போதைய இந்திய அரசுக்கும், எமது புதிய அரசுக்கும் இடையில் மிகவும் இணக்கமான, நட்புறவான மற்றும் ஆரோக்கியமான இருதரப்புப் புரிந்துணர்வு நிலவி வருகின்றது.” – என்றார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் இந்த அலுவலகத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.