மீகொடையில் கோர விபத்து ‘தன்சல்’ வரிசையில் நின்ற அறுவர் பரிதாப உயிரிழப்பு! – எழுவர் காயங்களுடன் வைத்தியசாலையில்…
கொழும்பு, மீகொடை பகுதியில் வெசாக் ‘தன்சல்’ (அன்னதானம்) ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கப் ரக வாகனமொன்று மோதி ஏற்பட்ட கோர விபத்தில், சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கப் ரக வாகனமே, கட்டுப்பாட்டை இழந்து மீகொடை பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வீதியோரத்தில் வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின்போது சம்பவ இடத்திலேயே 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 மற்றும் 58 வயதுடைய மூன்று ஆண்களுமாக மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுக்க பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினரும் அடங்குகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், கொடகம சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், விபத்துக்குள்ளான வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் கப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்தமை விசாரணையின்போது தெரியவந்தது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடை மேற்படி சாரதி இன்று திங்கட்கிழமை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தக் கோர விபத்து தொடர்பில் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
