தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு! – சுழிபுரத்தில் சோகம்.

தவறுதலாக நெருப்புக்குள் விழுந்து தீக்காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். சுழிபுரம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நடராசா செல்வராசா (வயது 85) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 27ஆம் திகதி குறித்த முதியவர் தனது வீட்டு வளவில் தென்னை ஓலைகளை வெட்டி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓலைகளில் தீப்பற்றியுள்ளது. அதன்போது அவர் நிலைதடுமாறி தீக்குள் விழுந்ததில், உடலின் பல பாகங்களிலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, அங்கிருந்தவர்களினால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.