லொத்தர் சபை ஊழல் விவகாரம்: முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 16 வருட கடூழியச் சிறை.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நான்கு வழக்குகளுக்குமாகச் சேர்த்து சரண குணவர்தனவுக்கு மொத்தம் 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், அவரது சிறைத்தண்டனைக் காலம் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் சரண குணவர்தன பணியாற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் அந்த நிறுவனத்துக்காக மூன்று சொகுசு வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாது அவற்றின் உரிமையாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டு, அரசுக்குப் பெருமளவு நிதி நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இவருக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தீர்ப்பை அறிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிடுகையில், “பிரதிவாதியான சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டிருந்த அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும், எவ்வித நியாயமான சந்தேகத்துக்கும் அப்பால் முறைப்பாட்டாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

வழக்குத் தீர்ப்பில் நீதிபதி மேலும் சுட்டிக்காட்டியதாவது:-

“அரச நிறுவனங்களில் தங்களது பதவிகளைப் பயன்படுத்தி உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாட்டின் பொருளாதாரம் தற்போதைய வங்குரோத்து நிலையை அடைவதற்கும் இத்தகைய முறையற்ற செயல்களே முக்கிய வழிவகுத்துள்ளன. அரச நிறுவனங்களில் இடம்பெறும் இவ்வாறான ஊழல் நடவடிக்கைகள், அந்த பொது நிறுவனங்கள் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை முற்றிலும் சீர்குலைக்கக் காரணமாக அமைகின்றன.” – என்றார்.

இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதியின் வயோதிபம் மற்றும் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மென்போக்கைக் கையாளுமாறு (தண்டனையைக் குறைக்குமாறு) சரண குணவர்தன தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் விசேட கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்தக் குற்றத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொள்ளும் போது, அரச நிறுவனங்களில் இனிமேல் இத்தகைய ஊழல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும், ஏனைய அதிகாரிகளை ஊக்கமிழக்கச் செய்வதற்கும் ஏதுவான வகையிலான கடுமையான முன்மாதிரித் தண்டனையொன்றையே நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று கூறி, அந்த மென்போக்குக் கோரிக்கையை நீதிபதி மொஹமட் மிஹாயில் முற்றாக நிராகரித்தார்.

தீர்ப்பை அடுத்து, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.