பாதாள உலகக் கும்பல் தலைவனுக்குப் போலிக் கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் சிக்கினார்!
ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகக் கடமையாற்றி வரும் உயர் அரச அதிகாரி ஒருவர், பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியான “கரந்தெனிய ராஜு” என்பவருக்கு வெளிநாடு தப்பிச் செல்வதற்காகப் போலிக் கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்த பெரும் குற்றச்சாட்டின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டிப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 41 வயதுடைய மேற்படி உயர் அதிகாரி, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரபல குற்றவாளியான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் நெருங்கிய சகோதரரான “கரந்தெனிய ராஜு” என்றழைக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர், அண்மையில் டுபாயில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். இலங்கை வந்திறங்கிய அவரைப் பொறுப்பேற்ற மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மேற்படி குற்றவாளி இலங்கையின் பாதுகாப்புத் தரப்பிலிருந்து தப்பிப்பதற்காக வேறொரு நபரின் பெயரையும், போலி ஆவணங்களையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு சென்றிருந்தமை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தப் போலி கடவுச்சீட்டு மோசடிச் சதித் திட்டம் குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய ஆழமான விசாரணைகளின் போது, கடந்த 2023ஆம் ஆண்டில் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவின் பிரதி கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்த ஒருவரே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் போலி கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அவசர தேடுதல்களின் போது, குடிவரவுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளரான அந்த நபர், தற்போது ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக உயர் பதவியில் அமர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நேற்று அவரைக் கைது செய்த பொலிஸார், இன்று சனிக்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அரசின் உயர் மட்டக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, பாரிய குற்றவாளிகளுக்குப் போலி ஆவணங்களை வழங்கிய இந்தச் சர்வதேச நெட்வொர்க் விவகாரம் தொடர்பில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்ச ஆகிய உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
