சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் மரண அடி – ஷானி அபேசேகரவை விசாரணையிலிருந்து நீக்கவே முடியாது! – கோட்டை நீதிவான் அதிரடி உத்தரவு.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நீக்க முடியாது என்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, அதிகாரி ஷானி அபேசேகரவை புலனாய்வு விசாரணைகளில் இருந்து நீக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து 23 பக்கங்கள் கொண்ட விரிவான கட்டளை உத்தரவை பிறப்பித்த நீதிவான், ஷானி அபேசேகரவை நீக்கக் கோரிய விண்ணப்பங்களை நிராகரித்தார். அத்துடன், தனக்கு எழுதுபொருள்களை வழங்குமாறு சுரேஷ் சலே விடுத்த கோரிக்கையையும், நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் முன்வைத்த கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட வழக்கு நடைமுறைகளின் போது, சுரேஷ் சலேவைக் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.