நீர்கொழும்பு சிறை மோதல் எதிரொலி: கைதிகளின் வழக்கு இனி ‘வீடியோ’வில்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டனர். இவ்வாறு மாற்றப்பட்ட கைதிகளை, அவர்களது வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் அந்தந்த நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தவிர்க்கும் நோக்கிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடரும் பொருட்டும், காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன முறையானது, கைதிகளைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதில் ஏற்படும் சிரமங்களையும், பாதுகாப்புக் கவலைகளையும் குறைப்பதற்கு உதவும் என்று திணைக்களம் நம்புகின்றது.

Leave A Reply

Your email address will not be published.