மூதூரில் மணல் அகழ்வைத் தடுக்கச் சென்ற விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

திருகோணமலை மாவட்டம், மூதூர், தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், மஹாவலி கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணல் அகழ்வை முறியடிக்கும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று அப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, மஹாவலி கங்கையில் இறங்கிய நிலையில், அதிரடிப்படை சார்ஜன்ட் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

காணாமல் போனவரைத் தேடும் பணிகளில் விசேட அதிரடிப்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்தத் தேடுதல் நடவடிக்கையின் பயனாக, அந்த சார்ஜன்ட்டின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.