கபிலவின் மனைவிக்கு சர்வதேசப் பிடியாணை.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராக, சர்வதேச திறந்த பிடியாணையைப் பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாசான் அமரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, நீதிவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா விஜேநாயக்கவுக்கு ஆங்கிலத்தில் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கோரப்பட்டதை நீதிவான் ஏற்றுக்கொண்டார்.

இதன்போது, பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் பிணைதாரர்களாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளமையால் அவர்களைப் பிணைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரினார். அத்துடன், 10 மில்லியன் ரூபா பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்யவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

இருப்பினும், வழக்குக் கோப்புகளை ஆராய்ந்த நீதிவான், பிணைப் பணமாக வைப்பிலிடப்பட்ட தொகை 10 மில்லியன் ரூபா அல்ல, 20 மில்லியன் ரூபா என்பதைச் சுட்டிக்காட்டினார். பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு முன்னதாக, அதற்கான காரணங்களை எழுத்து மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டார்.

இதன்படி, மேற்படி இரு பிணைதாரர்களையும் பிணைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க நீதிவான் அனுமதி அளித்ததுடன், பிணைப் பணத்தை அரசுடமையாக்குவது தொடர்பான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்கவும் பணித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, தற்போது உயிரிழந்துவிட்டார் என்பதும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.