சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா? தற்கொலையா? இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே இறுதி முடிவு.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே அது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் (மனைவி, மகன்) மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உட்பட நெருக்கமானவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் மீட்கப்பட்ட அனைத்து சான்றுப்பொருள்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மரணத்துக்கான காரணத்தை இப்போதே தீர்மானிக்க முடியாது. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே இது தற்கொலையா அல்லது கொலையா என்பதை உறுதியாகக் கூற முடியும்.

இந்த விவகாரத்தில் எவ்வித பக்கச்சார்புமின்றி, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.