பெருந்திரளானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் முழு அரச மரியாதையுடன் விடைபெற்றார் முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்ன.
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகச் சேவையாற்றிய சி.டி. விக்கிரமரத்னவின் பூதவுடல், அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில், முழு அரச மற்றும் பொலிஸ் மரியாதைகளுடன் நேற்று திங்கட்கிழமை பொரளளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 17 ஆம் திகதி தனது மாலபே இல்லத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். தனது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகித்தனர். எனினும், இந்த மரணம் தொடர்பில் உண்மையைக் கண்டறிய மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து இரு விசேட குழுக்கள் மூலம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

1963 மார்ச் 26 இல் பிறந்த சி.டி. விக்கிரமரத்ன, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், 1986 ஜூன் 16 இல் உதவி பொலிஸ் அத்தியட்சகராகப் பணியில் இணைந்து, பொலிஸ் வரலாற்றில் புலனாய்வு அதிகாரி ஒருவராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பொலிஸ்மா அதிபர் நிலையை அடைந்த முதலாவது அதிகாரியாவார்.
2020 நவம்பரில் இவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற வேண்டிய நிலையில் நான்கு முறை சேவை நீடிப்புகளைப் பெற்று 2023 நவம்பர் 27 ஆம் திகதி அன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு பௌத்த மத வழிபாடுகளுடன் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகின. மாலை 4 மணியளவில் அவரது பூதவுடல் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு, மரியாதை அணிவகுப்போடு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தேசத்துக்கு அவர் ஆற்றிய சேவையை நினைவுகூர்ந்து, பொலிஸ் திணைக்களம் அவருக்கு இறுதி மரியாதை வழங்கியது. அவரது குடும்பத்தாரின் ஆறாத் துயரத்திற்கு மத்தியில், நாட்டிற்காக உழைத்த ஒரு சிறந்த அதிகாரிக்கு தேசம் பிரியாவிடை அளித்தது.
அவரது பூதவுடல் அஞ்சலிக்காக மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
