81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இவ்வருடம் இதுவரை 81 ஆயிரத்து 511 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 21 ஆயிரத்து 537 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இம்மாதத்தில் கடந்த 25 நாள்களில் மாத்திரம் 26 ஆயிரத்து 136 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மாகாணங்கள் வாரியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்தில் 43 ஆயிரத்து 132 (52.92 சதவீதம்) நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 329 (15.13 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா (17,280), கொழும்பு (16,213), மாத்தறை (5,608), கண்டி (5,581), களுத்துறை (5,335), இரத்தினபுரி (4,551), காலி (4,499), குருநாகல் (2,265) உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் (3,315) தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வைத்திய நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் தென்படுமாயின் உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும். மேலும், குழந்தைகளுக்கு 24 மணித்தியாளங்கள் காய்ச்சல் தென்படுமாயின் தாமதிக்காது உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்போடு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினரால் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், பொதுமக்கள் இந்தா நாள்களில் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து, சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பளிக்காது தூய்மையாகப் பேணுவதோடு, நோய் பரவல் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.