நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்: 2 விமானிகள் தற்காலிக பணிநீக்கம்!

புதுடெல்லி,

தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று டெல்லி வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பணியாளர்கள் உள்பட 137 பேர் இருந்தனர்.இந்த விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது திடீரென 300 அடிக்கு கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் ஏற்பட்ட பயங்கர அதிர்வில் சில பயணிகள் மற்றும் விமானிகளுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் பின்னர் டெல்லியில் இந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப் பட்டது. அதேநேரம் நடுவானில நடந்த இந்த சம்பவம் விமானப்போக்குவரத்து துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சினைக்கான சாத்தியக்கூறு
எனவே விமானப்போக்குவரத்து விதிகளின்படி 2 விமானிகளுக்கும் உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக மது அல்லது போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? அல்லது மூளை அல்லது மன செயல்பாட்டை பாதிக்கும் பொருட்களை பயன்படுத்தி உள்ளனரா? போன்றவற்றை உறுதி செய்யும் மனோவிளைவு சோதனை நடத்தப்பட்டது.இதில் முதற்கட்ட சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான சாத்தியக்கூறு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிகிறது. எனவே அதை உறுதி செய்வதற்காக விரிவான பரிசோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதற்கான பரிசோதனைக்கூடத்துக்கு விரிவான பரிசோதனைக்காக விமானிகளின் ரத்த மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

பணியில் இருந்து நீக்கம்
இந்த சம்பவம் தீவிரமான பிரச்சினையாக வகைப்படுத்தப்பட்டு உள்ள தால், விமான விபத்து புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் விசாரணை மற்றும் பரிசோதனை செயல்முறைகள் நிறைவடையும் வரை, சிவில் விமானப்போக்குவரத்து இயக்குனரகம் 2 விமானிகளை யும் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கியுள்ளது.பரிசோதனை முடிவுகள் மற்றும் உறுதிப்படுத்தும் சோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளது.விமானம் 300 அடிக்கு கீழே இறங்கிய விவகாரத்தில் விமானிகள் மீதான இந்த பரிசோதனை நடவடிக்கை விமானப்போக்குவரத்து துறையில் அதிர் வலைகளை கிளப்பி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.