கேரள இளைஞர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

நெடுமங்காடு: கேரள மாநிலம் கண்ணன்மூலாவில் 19 வயது வாலிபர் விஷ்ணு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அம்மாநில சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘டினி பாபு’ என்பவரின் சகோதரர் சுனி பாபு கொலை செய்யப்பட்டார். இதில் ‘புத்தன்பாலம் ராஜேஷ்’ என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து குற்றக் கும்பல்களுக்கு இடையே எழுந்த பகையின் காரணமாக, புத்தன்பாலம் ராஜேஷுக்கு நெருக்கமாக இருந்த 19 வயதேயான விஷ்ணு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் அவரது வீட்டிலேயே வைத்து வெட்டி கொடூரமாகக் கொலை செய்தது.

இந்த வழக்கில், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஷாஜகான் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, அருண் (என்ற) பரட்ட அருண், லல்லு, ராஜேஷ் (என்ற) பூச்சா ராஜேஷ், சனல்குமார் (என்ற) சஞ்சு, விஜேஷ் (என்ற) விஷ்ணு, மனு (என்ற) ஷெட்டி மனு மற்றும் நாத் (என்ற) போல்ஜி ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.