செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு – இதுவரை 583 மனித எலும்புத் தொகுதிகள் மீட்பு – நான்காம் கட்டம் குறித்து ஒக்டோபர் 14 இல் முடிவு.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றோடு நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நான்காம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கலந்துரையாடலில் எடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதி நாளான 56 ஆவது நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது, புதிதாக ஒரு மனித எலும்புத் தொகுதி அடையாளம் காணப்பட்டதோடு, ஏற்கனவே அடையாளம் 9 மனித எலும்புத் தொகுதிகளுடன் மொத்தமாக 10 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 583 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய அகழ்வின்போது எலும்பு எச்சங்கள் குவியலாகவும் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு நீதிமன்றக் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நேற்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சில சான்றுப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விரல் எலும்புத் தொகுதியிலிருந்து ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு செப்பிலான மூன்று மோதிரங்களும், கழுத்து எலும்புப் பகுதியிலிருந்து அட்சரக்கூடு ஒன்றும், நாணயக் குற்றி ஒன்றும் என மூன்று சான்றுப் பொருள்கள் மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 56 நாள்களைக் கொண்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இதுவரை இந்தப் புதைகுழியிலிருந்து குவியல்களாக 51 மனித எச்சக் குவியல்களும், மொத்தம் 170 சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணிகளுக்கும் அகழ்வுப் பணியில் ஈடுபடும் நிபுணர் குழுவினருக்கும் இடையே நடைபெறவுள்ள நிர்வாக ரீதியான கலந்துரையாடலைத் தொடர்ந்தே, நான்காம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.