செம்மணிக்கு வந்த கனேடியத் தூதரகத்தின் பிரதிநிதிகள் அரசின் அனுமதி கிடைக்காமையால் பாதியில் திரும்பினர்.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து முறையான அனுமதி கிடைக்காத காரணத்தால், சித்துப்பாத்தி இந்து மயான வாயில் வரை வந்துவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதி நாளான 56 ஆம் நாள் அகழ்வு நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. மதிய உணவு இடைவேளையின் போது கனேடியத் தூதரக அதிகாரிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காகக் கனேடியத் தூதரகம் தரப்பில் உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், இலங்கை அரசிடமிருந்து அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை.
அகழ்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வருகை தருவதாக இருந்தால், முதலில் அரசின் அனுமதியைப் பெற்று நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், கனேடியத் தூதுவராலயத்துக்கு அரசின் அனுமதி கிடைக்காததால், நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, செம்மணி வாயில் வரை வருகை தந்த கனேடியத் தூதுவராலயப் பிரதிநிதிகள், அரசின் அனுமதி பெறப்படாத சூழ்நிலையில் புதைகுழிப் பகுதிக்குப் செல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
