பஸிலுக்கு பிடியாணை மேலும் நீடிப்பு!

முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினார் எனக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பஸில் ராஜபக்ஷ, நீதிமன்றம் ஏற்கத்தக்க மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து மன்றில் ஆஜராகாமல் இருந்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரது பிணைக்குப் பிணையாளர்களாகக் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதிவான், அதனைச் செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

அத்துடன், பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். அரசு தரப்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும், பிரதிவாதிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.