ஒருவருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே: மத்திய அரசு அதிரடி!

சிம்காா்டுகள் பெறுவது தொடா்பான விதியை மத்திய அரசு கடினமாக்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அப்பாவி மக்களை ஏமாற்றி ‘எண்மக் கைது’ (டிஜிட்டல் அரஸ்ட்) செய்திருப்பதாகக் கூறி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடா்ந்து நடந்தபடி உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்கையில், மா்ம நபா்கள் போலி சிம்காா்டுகளை பயன்படுத்தி மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல பல்வேறு நிதி மோசடிகளிலும் போலி சிம்காா்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது குற்றவாளிகளைத் தேடி கண்டுபிடிப்பதில் அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது.

எனவே, பிறரின் பெயா், ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக சிம்காா்டுகளை வாங்குவது, சிம்காா்டுகளை முறைகேடுகளுக்குப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் சிம்காா்டுகள் தொடா்பான விதியை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இதுதொடா்பாக தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடா்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், வாடிக்கையாளா்கள் புதிய சிம்காா்டுகளை வாங்கும்போதே, அவரின் அடையாளம் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசின் எண்ம இன்டலிஜென்ஸ் தளம் மூலம் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் சரிபாா்க்க வேண்டும், விவரங்களைச் சரிபாா்த்த பிறகே புதிய சிம்காா்டுகளை வழங்க வேண்டும், அதைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான விவரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சிம்காா்டுகள் பெறுவோருக்கு அதை விநியோகிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் தனிநபா் ஒருவா் அதிகபட்சம் 9 சிம்காா்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்க வேண்டும் என்றும், ஜம்மு – காஷ்மீா், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்தோா் 6 சிம்காா்டுகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் பெயரில் மொத்தம் எத்தனை சிம்காா்டுகள் உள்ளன என்பதை மத்திய அரசு கண்காணிக்கும்.

வாடிக்கையாளா் ஏற்கெனவே 9 சிம்காா்டுகள் வைத்து இருப்பது எண்ம இன்டலிஜென்ஸ் தளத்தில் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய சிம்காா்டை தொலைத் தொடா்பு நிறுவனங்கள் தரக்கூடாது. ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் இதை அமல்படுத்த தொழில்நுட்ப மற்றும் அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளை தொலைத் தொடா்பு நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.