சிலாபம் கடலில் படகு கவிழ்ந்து முதியவர் பலி!

சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிர் தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 67 வயதான திஸாநாயக்ககே ஜயரத்ன என்ற முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த இருவரில் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

காப்பாற்றப்பட்ட மேற்படி மீனவர் காயங்களுடன் உடனடியாகச் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.