கனடாவில் உழைத்த வளம் தாயகத்தில் உயிராக மாறுகின்றது வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது.
செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், சில குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு நோயாளியின் சிகிச்சை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுப்படாமல், முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பாதிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். எனவே, குருதி சுத்திகரிப்பு வசதிகளை நோயாளிகளின் வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன், அவர்களது வாழ்க்கைச் சுமையையும் குறைக்கும் மனிதநேயப் பணியாக அமையும் என்றார்.
சிறுநீரக நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்துக்குரிய சுகாதாரச் சவாலாக மாறியுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வுகளும் சுகாதாரத் தரவுகளின் அடிப்படையிலான கவனமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியைச் சுட்டிக்காட்டுவது அறிவியல் ரீதியாகப் பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிகிச்சை வழங்குவதோடு மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகாமல், சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கான காரணிகளைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு முன்னரும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக மேலும் ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் சென்றடைவதன் மூலம் பிராந்திய மட்டத்திலேயே சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமரனின் நீண்டகால மனிதநேயப் பணியையும் ஆளுநர் பாராட்டினார். தாம் 2007ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் வீடமைப்புத் திட்டமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் செந்தில்குமரனுடன் இணைந்து பங்கேற்றிருந்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், அக்காலத்திலிருந்தே அவர் சேவை மனப்பாங்குடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
‘இன்று எதை எடுத்தாலும் விமர்சனம். நல்லதைச் செய்தாலும் இன்னும் கூடுதல் விமர்சனம். இவ்வாறான சூழலையும் தாண்டி மக்களுக்காக உதவி செய்வது பாராட்டுக்குரியது’ எனக் குறிப்பிட்ட ஆளுநர், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மனிதநேயப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் செந்தில்குமரனின் அர்ப்பணிப்பை வரவேற்றார்.
செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தினூடாக 2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இலவச இருதயச் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த 201 சிறுவர்கள் மற்றும் இளம் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் இருதயச் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுநீரக நோயாளிகளுக்காக மல்லாவி மற்றும் மாஞ்சோலைப் பகுதிகளில் குருதி சுத்திகரிப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் இந்நிறுவனம் பங்களித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கான இவ்வாறான பங்களிப்புகள் வடக்கு மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படாத மனிதநேயத் தொடர்பின் வெளிப்பாடாக அமைகின்றன என ஆளுநர் தெரிவித்தார். செந்தில்குமரன் கனடாவில் வாழ்ந்து வருவதுடன், அங்கு மேற்கொள்ளும் தொழில் மற்றும் சமூகப் பங்களிப்புகளுடன் இணைந்து தாயக மக்களுக்காகவும் தொடர்ச்சியாக உதவி செய்து வருவது பாராட்டத்தக்கது என்றார்.
‘கனடாவில் உழைத்த வளம் தாயகத்தில் உயிராக மாறுகிறது’ என்ற உணர்வை முன்னிறுத்திய ஆளுநர், புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் பொருளாதாரத்துக்கும் சமூகத்துக்கும் பங்களிப்பதுடன், தாயகத்துடனான உறவையும் பேணி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து முதலீடு செய்வது, தொழில்களை உருவாக்குவது, அறிவும் தொழில்நுட்பமும் பகிர்வது அல்லது ஒரு மருத்துவமனையின் தேவையை ஏற்றுக்கொண்டு அதற்கான உதவியை வழங்குவது எனப் பல்வேறு வழிகளில் பங்களிக்க புலம்பெயர் உறவுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் உதவிகளை ஒரு தனிப்பட்ட மருத்துவமனையின் தேவையாகக் கருதாமல், ஒரு முழுப் பிரதேசத்தின் சுகாதாரத் தேவையை ஒருங்கிணைந்து ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறைக்கு நகர வேண்டிய காலம் இதுவாகும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். இதற்கு அமைவாக, எந்த மருத்துவமனைக்கு எந்த உபகரணம் உண்மையில் தேவை என்பதைத் திட்டமிட்டு அடையாளம் கண்டு, புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து செயற்பட மாகாண நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னர் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தரப்பினருக்கான வரித்தீர்வை நடவடிக்கைகளில் வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான மனிதநேய நன்கொடைகளை ஊக்குவித்து வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்த மாகாண நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இன்று வழங்கப்படுவது ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்றாலும், அதன் உண்மையான பெறுமதி அதைவிடப் பெரியது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை வாய்ப்பையும், குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், வடக்கு மாகாண மக்களுக்கு மனிதநேயப் பங்காளித்துவத்தின் மீது புதிய நம்பிக்கையையும் வழங்குகின்றது என்றும் ஆளுநர் தெரிவித்தார். கனடா மக்களின் மனிதநேயப் பங்களிப்புக்கும் செந்தில்குமரனின் அர்ப்பணிப்புக்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அணிகளின் உறுப்பினர்கள், செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இருதயச் சத்திரசிகிச்சையால் பயன்பெற்ற சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
