ராஜபக்ஷ அணி மீண்டும் அரியணை ஏற மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் – ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா திட்டவட்டம்.

பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ஷ அணியினர் மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

சிறந்த திட்டமிடலுடன் தற்போதைய அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும், வெளியகத் தாக்கங்களினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. எனினும், சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்.

வங்குரோத்து நிலையடைந்து வீழ்ச்சியடைந்த அரச கட்டமைப்புடனான அரசையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றார்.

கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாளக் குழுக்களுக்கும் அரச அனுசரணை வழங்கப்பட்டிருந்ததுடன் செல்வந்தர்கள் எவ்வித அச்சமுமின்றி ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர்.

தற்போது அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. பிரபுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசேட சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளனர். ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினை அல்ல.

அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஒருசில தரப்பினரிடம் குறைபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த கால மோசடியான நிர்வாகக்மைப்புக்குப் பழக்கப்பட்டவர்கள் குறித்தும் நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.