கிளிநொச்சியில் கப் வாகனம் மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை பலி! – தாத்தா இயக்கியபோது சோகம்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கியபோது, வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற பெண் குழந்தை சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தின் சாரதியான குழந்தையின் தாத்தா அதனை இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை அதன் சக்கரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றப் பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.