இலங்கையில் ஒரு மாதத்தில் மட்டும் 70 பேரைக் காவுகொண்டது கொரோனா!

இலங்கையில் ஒரு மாதத்தில் மட்டும் 70 பேரைக் காவுகொண்டது கொரோனா!
இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த ஒரு மாதத்தில் (ஒக்டோபர் 22 – நவம்பர் 21) மட்டும் 70 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகூடிய சாவுகள் நேற்றே பதிவாகியுள்ளது.

5 ஆண்களும், 4 பெண்களுமே நேற்று பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 3 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மரணமடைந்தவர்களின் விபரம் வருமாறு:-

75ஆவது சாவு

கொழும்பு 02, கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவரது சாவுக்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

76ஆவது சாவு

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்துக்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொரோனாத் தொற்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77ஆவது சாவு

கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 89 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலியாகியுள்ளார். இவரது உயிழப்புக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

78ஆவது சாவு

கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான பெண் ஒருவர், வீட்டில் திடீரென சாவடைந்துள்ளார். இவரது மரணத்துக்கான காரணம், கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

79ஆவது சாவு

கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது சாவுக்கான காரணம், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

80ஆவது சாவு

கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர், வீட்டில் திடீரென மரணமடைந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கான காரணம், கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

81ஆவது சாவு

கொழும்பு 06, வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, கொழும்பு கிழக்கு, முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார். இவரது சாவுக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மற்றும் பக்டீரியாத் தொற்று மற்றும் திடீர் அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

82ஆவது சாவு

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட உக்கிரமான நியூமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

83ஆவது சாவு

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த, 76 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பலியாகியுள்ளார். இவரது சாவுக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மற்றும் குருதி நஞ்சடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றும் 491 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16 ஆயிரத்து 256 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 98 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.